நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் உள்ளது. இது தரைத்தளம் மற்றும் 3 மாடிகளை கொண்டது. இதில் 3 தியேட்டர்கள், ஷாப்பிங் மால், உணவகம், கேம் ஷாப் மற்றும் 23 கடைகள் அமைந்துள்ளன. இந்த வணிக வளாக கட்டிடம் அனுமதி இன்றி கட்டப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து முன்னாள் ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். அதைத்தொடர்ந்து கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து, இந்த வணிக வளாகம் மற்றும் தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வணிக வளாகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
இதனால் மாநகராட்சி அதிகாரிகள் வணிக வளாக உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுத்து வணிக வளாகத்தை மூடுமாறு உத்தரவிட்டனர். ஆனால், வணிக வளாகத்தில் உள்ள கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதையடுத்து வணிக வளாகத்தை மூடி ‘சீல்’ வைக்குமாறு மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று காலை ஆணையர் ஆஷா அஜித் தலைமையில், கோட்டாட்சியர் மயில், மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி மற்றும் ஆய்வாளர்கள், மின்வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், கோட்டார் போலீஸ் நிலைய போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் என ஏராளமானோர் அந்த வணிக வளாகத்துக்கு சென்றனர்.
அவர்கள் வணிக வளாகத்தில் வாயில் இருக்கும் பகுதிகள் அனைத்திலும் பூட்டு போட்டு ‘சீல்’ வைத்தனர். வாகன நிறுத்தம் மற்றும் பிரதான நுழைவு வாயில் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவிக்கும் வகையிலான ரிப்பன்களை கட்டி வைத்தனர். கட்டிடத்தின் முன்பகுதியில் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் ஒன்றையும் ஒட்டினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Post a Comment