கன்னியாகுமரி அருகே தேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் தேரூர், தண்டநாயக்கன்கோணத்தில் நடமாடும் ரேஷன் கடை தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு ரேஷன் கடையை தொடங்கி வைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நடமாடும் ரேஷன் கடை திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுக்கு இந்த திட்டம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பொது வினியோக திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் 2002, 2014-ம் ஆண்டுகளில் முதல் பரிசையும், 2016-ம் ஆண்டு இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளது.
தமிழக அரசு அரிசி உள்ளிட்ட பொருட்களின் விலையை பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவைசெய்யும் அடிப்படையில் வழங்கி வருகிறது.
கொரோனா நோய் பரவலை தடுப்பதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். வேளாண் மசோதாவால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதிர்கட்சிகள் திட்டமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் 770 கூட்டுறவு சங்க ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 736 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 55 ரேஷன் கடைகளில் நடமாடும் ரேஷன் கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் 25 ரேஷன் கடைகளில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் பயனாளிகள் பயன் பெறுவார்கள். தற்போது பொருட்கள் வாடகை வாகனத்தில் எடுத்து சென்று வழங்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் சொந்த வாகனங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், ஆஸ்டின் எம்.எல்.ஏ., மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ. அசோகன், அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், அ.தி.மு.க. இலக்கிய அணி மாநில இணை செயலாளர் சதாசிவம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெசீம், பேரூர் செயலாளர்கள் வீரபத்திர பிள்ளை, ராஜபாண்டியன், தாமரை தினேஷ், குமார், ஆடிட்டர் சந்திரசேகரன், நாகர்கோவில் நகர செயலாளர் ஜெயசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அவைத்தலைவர் தம்பிதங்கம், அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகா வேளாண்மை விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணதாஸ், கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துணை பதிவாளர் சங்கரன் வரவேற்று பேசினார். முடிவில், தேரூர் தொடக்க வேளாண்மை கடன் சங்க செயலாளர் சுகிர்தா நன்றி கூறினார்.
Post a Comment