0
குமரி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டு அளித்த தீர்ப்பை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் சுல்பிக்கர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி, முகமது நூக், ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலி உஸ்மானி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர். எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த ஆர்ப்பாட்டமானது போலீசாரின் அனுமதியின்றி நடந்ததாகவும், எனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

இதேபோல், திட்டுவிளையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் மைதீன் தலைமை தாங்கினார். பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா நகர தலைவர் அன்சார் கண்டன உரையாற்றினார். இந்த போராட்டத்தில் திட்டுவிளை நகர செயலாளர் அசாருதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மணவாளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் அஸிம் தலைமை தாங்கினார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பினர் செய்யதுஅலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். கிளை பொருளாளர் இப்ராகிம் நன்றி கூறினார். 

தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவிதாங்கோடு நகர தலைவர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். திருவிதாங்கோடு நகர செயலாளர் அல்தாப் வரவேற்றார். 

பத்மநாபபுரம் தொகுதி தலைவர் ஷெரீப் தலைமை உரையாற்றினார். கட்சியின் மாவட்ட பொருளாளர் கலீல் ரகுமான், சமூக ஊடகத் துறை மாவட்ட செயலாளர் ஆஷிக், பத்மநாபபுரம் தொகுதி செயலாளர் அபு, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆஷிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் குமரி மாவட்ட முன்னாள் தலைவர் மஹின் அபூபக்கர் மற்றும் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி ஜாகிர் உசேன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Post a Comment

 
Top